முன்னாள் இந்திய கால்பந்து வீரரும், மலப்புரம் ஸ்பெஷல் போலீஸ் காமாண்டென்டுமான ஐ.எம். விஜயனுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த பட்டம் ரஷ்யாவில் உள்ள அகன்கிர்ஸ்க் வடக்கு மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து வழங்கப்படுகிறது. விளையாட்டுத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இம்மாதம் 11ம் தேதி ரஷ்யாவில் நடந்த விழாவில் அவருக்கு பட்டம் அளிக்கப்பட்டது.
1999 தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பூட்டானுக்கு எதிராக 12வது வினாடியில் கோல் அடித்தார். அந்த நேரத்தில் இது உலகின் அதிவேக கோலாக இருந்தது. கேரளா போலீஸ் கால்பந்து கிளப் மூலம் ஐ.எம். விஜயன் வெற்றிகரமான வாழ்க்கையைத் தொடங்கினார். திருச்சூரை பூர்வீகமாகக் கொண்ட இவர், எஃப்சி கொச்சின், மோகன் பாகன், சர்ச்சில் பிரதர்ஸ் மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
2000-2004 வரை இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக இருந்தார். மலப்புரம் எம்எஸ்பியில் அமைக்கப்படும் போலீஸ் கால்பந்து அகாடமியின் இயக்குனராகவும் விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பல்வேறு மலையாளம், தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். திமிரு, கெத்து, கொம்பன், பிகில் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், சாந்தம், பேச்சிலர் பார்ட்டி, கிசான், தி கிரேட் பாதர், பொரிஞ்சு மரியம் ஜோஸ் உள்ளிட்ட ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.