Categories
கிரிக்கெட் விளையாட்டு

கால்பந்து: சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற கேரளா….!!

இந்தியன் மகளிர் லீக் தொடரின் இறுதி போட்டியில் கோகுலம் கேரள அணி 3-2 என்ற கோல் கணக்கில் கிரிப்சா எஃப்சி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆடவர்களுக்கு நடத்தப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் பாணியில், மகளிருக்கான கால்பந்து தொடர் இந்திய மகளிர் கால்பந்து லீக் என்ற பெயரில் 2017ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இந்த தொடரின் நான்காவது சீசனின் இறுதி போட்டியில் கோகுலம் கேரளா – மனிப்பூரின் கிரிப்சா எஃப்சி அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே கோகுலம் கேரள வீராங்கனை பரமேஸ்வரி தேவி கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதையடுத்து, 25ஆவது நிமிடத்தில் கோகுலம் கேரள அணியின் நட்சத்திர வீராங்கனை கமலா தேவி மிரட்டலான கோல் அடித்து அசத்தினார்.

இதன்பின் ஆட்டத்தில் எழுச்சிபெற்ற கிரிப்சா அணி கோல் அடிக்கும் முனைப்பில் விளையாடியது. ஆட்டத்தின் 33ஆவது நிமிடத்தில் டங்மேய் கிரேஸ் கோல் அடித்தார். அதன்பின் 72ஆவது நிமிடத்தில் கிரிப்சா அணியின் முன்கள வீராங்கனை ரதன்பாலா தேவி கோல் அடிக்க ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

இதையடுத்து, இப்போட்டி டிராவை நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில், கோகுலம் கேரளா வீராங்கனை சபித்ரா பந்தாரி 87ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதனால், கோகுலம் கேரள அணி 3-2 என்ற கோல் கணக்கில் கிரிப்சா அணியை வீழ்த்தி இந்தியன் மகளிர் லீக் கோப்பையை வென்று அசத்தியது.

Categories

Tech |