மொபட் மீது மோதி தனியார் பேருந்து கால்வாயில் பாய்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஅள்ளி பகுதியில் இருந்து பயணிகளுடன் தனியார் பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சரவணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ரவி என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் கோடியூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் திருப்பதி என்பவர் மொபட்டை தள்ளி சென்றார். திடீரென அவர் பேருந்துக்கு குறுக்கே வந்ததால் சரவணன் சடன் பிரேக் பிடித்துள்ளார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திருப்பதி மீது மோதியதோடு, சாலையோர கால்வாயில் பாய்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த திருப்பதி, பேருந்தில் பயணித்த சாந்தி, பரமேஸ்வரி ஆகிய மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தனியார் பேருந்து கிரேன் மூலம் மீட்கப்பட்டது.