தமிழகத்தில் கொரோனா காலத்திலும் காவலர்கள் விடுமுறை இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணி இன்றியமையாதது. விடுப்பு இன்றி பணி செய்து வந்த நிலையில் காவலர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இதனால் காவலர்களுக்கு வார விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு காவலர்களுக்கு ஓய்வுக்காக வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் காவலர்கள் தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவது வாரத்தில் ஒருநாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து கோவை புதூர் நான்காம் பட்டாலியனில், தலை தீபாவளி கொண்டாடும் காவலர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கோவை புதூர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை நான்காம் அணியின் அனைத்து குழுமங்களிலும் பணிபுரியும் போலீசாருக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.தலை தீபாவளி கொண்டாட இருக்கும் காவலர்கள் நவம்பர் 3 முதல் 7 ஆம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறையும் 200 ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளும் 100 ரூபாய் மதிப்பிலான இனிப்பும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்பளிப்பை அந்தந்த குழும அலுவலகத்தில் அல்லது தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.