தமிழக காவல்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து வழக்கில் நாளை பிற்பகல் பதில் மனுவை தாக்கல் செய்ய தவறினால் தமிழக உள்துறை செயலர், தமிழக காவல்துறை தலைவர் காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.
கரூர் பகுதியைச் சேர்ந்த காவலர் மாசிலாமணி என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் காவல்துறையினர் குறைந்த ஊதியத்தில் பணி புரிந்து வருகின்றனர். மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மாநிலங்களில் மட்டுமின்றி உகாண்டா நாட்டில் கூட ஊதியம் அதிகமாக வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் காவலர்களுக்கு 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை ஊதியமாக வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
24 மணி நேரமும் பணியாற்றும் போலீசாரின் ஊதியத்தை உயர்த்துவதுடன், போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு நீதிபதி கிருபாகரன் – புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதிலளிக்க கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து காவலர்களின் பிரச்சனைகளுக்கு பதில் அளிப்பதில் என்ன பிரச்சனை ? மற்ற துறையைச் சார்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்தி தங்களது பிரச்சினைக்கு தீர்வு காண்கின்றனர். காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் காலதாமதம் செய்யலாமா ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த மனு மீது நாளை பிற்பகலுக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய தவறினால், தமிழக உள்துறைச் செயலர், தமிழக காவல்துறை தலைவர் ஆகியோர் காணொளி வாயிலாக ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்து வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.