கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் காவல்துறை மீது அண்ணாமலை அவதூறு பரப்புவதாக கூறப்பட்ட நிலையில், அவர் விளக்கம் அளித்துள்ளார். போலீஸ் உயர் பதவிகள் அரசியலாக்கப்படுவது வருத்தம் அளிப்பதாக கூறிய அவர், காவல்துறையின் தலைமை பொறுப்பில் உள்ள 2 முக்கிய அதிகாரிகள் தங்களின் அடிப்படை கடமையை கூட செய்ய தவறிவிட்டனர்.
காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி காவல்துறையினராக இல்லாமல் திமுகவைப் போல செயல்பட்டு வருகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுகவை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை நாங்கள் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளுமே 2 உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே.
ஆனால் அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள காவல்துறையிலிருந்து பொதுவான ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார்கள். பல பெருமைகளுக்கு பெயர் போன தமிழக காவல்துறையில் அரசியலைப் புகுத்தி சிறுமைப் படுத்துவது யார் என்று மக்கள் அறிவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். காவல்துறை தலைமையகம் வெளியிட்ட அறிக்கையின் ஒவ்வொரு வரிக்கும் தக்க விளக்கம் அளிக்கப்படும் என்றார்.