நாகப்பட்டினம் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
நாகையில் இருந்த மீனவர்கள் சுனாமி பாதிப்பிற்கு பிறகு பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். அதேபோல ஆரிய நாட்டு தெருவில் வசித்து வந்த மீனவர்களும் பல்வேறு இடங்களுக்கு குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு ஆரிய நாட்டு தெருவில் இருப்பவர்களுக்கும், மகாலட்சுமி நகரில் குடியமர்த்தப்பட்டவர்களுக்கும் மீனவ பஞ்சாயத்தார் பொறுப்பு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மாலை 6 மணி அளவில் கடந்த 7-ஆம் தேதி மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கு நாகை நகர பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து அவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களை பார்க்க சென்றவர்களையும் அரிவாளால் வெட்ட முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து வெளிப்பாளையம் காவல்துறையினர் 17 பேர் மீது வழக்குப்பதிந்தனர். ஆனால் இது தொடர்பாக ஒருவரை கூட காவல்துறையினர் கைது செய்யவில்லை. இதனால் நாகை புதிய நிலையம் முன்பு போலீசாரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்வதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 30 நிமிடம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.