காவல்துறையினரை தாக்கி மர்ம நபர்கள் செல்போனை பறிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் காவல்துறை ஆணையராக ராமகிருஷ்ணன் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் பாலக்கரையில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் ராமகிருஷ்ணன் வந்துக்கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் ராமகிருஷ்ணனை வழிமறித்து ஹெல்மெட்டால் தாக்கியுள்ளனர். மேலும் ராமகிருஷ்ணன் மஃப்டியில் இருந்ததால் காவல்துறையினர் என்பது மர்ம நபர்களுக்கு தெரியவில்லை.
இதனை அடுத்து அவர்கள் ராமகிருஷ்ணனை தாக்கியதோடு, அவரிடமிருந்த செல்போனை பறித்துவிட்டு தப்பி ஓட முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் பொதுமக்கள் இணைந்து அந்த 2 நபர்களையும் பிடித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். அதன் பின் காவல்துறையினர் அந்த நபர்களிடம் நடத்திய விசாரணையில், ஒருவர் குறிஞ்சி நகர் பகுதியில் வசிக்கும் நரேஷ்பாண்டி என்பதும், மற்றொருவர் செங்குளம் காலணியில் வசிக்கும் மனோரஞ்ஜன் என்பதும் தெரியவந்துள்ளது. அதன் பின் காவல்துறையினர் வழக்குப்பதிந்து இருவரையும் சிறையில் அடைத்து விட்டனர்.