Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காவல்துறையின் தொடர் வேட்டை…. கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல்…. 2 பேர் கைது….!!

சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டு கிலோ கணக்கில் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு ஆப்ரேஷன் கஞ்சா 2.0 வேட்டையை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் இரவு பகலாக கஞ்சா வேட்டையை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து வருகிறார்கள்.

அதேபோன்று ரயில்கள் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்பட்டு வருவதை தடுப்பதற்காக ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வந்தனர். விஜயவாடா, விசாகப்பட்டினம் உட்பட பல இடங்களில் இருந்து தமிழகத்திற்கு ரயில்கள் மூலம் அதிக அளவில் கஞ்சா கடத்தல் நடைபெற்று வருகிறது. இதனால் அவுரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஆந்திரா மாநிலம் வழியாக தமிழகத்திற்கு வருகின்ற ரயில்களில் ரயில்வே காவல் துறையினர் கஞ்சா வேட்டை நடத்தி வந்தனர்.

அதேபோன்று சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் துணை சுப்பிரண்டு முத்துக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி, சசிகலா தலைமையில் ரயில்வே காவல்துறையினர் தொடர்ந்து சோதனை செய்து வந்துள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்களாக அவுராவிலிருந்து சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரலுக்கு வந்த ரயில்களில் சோதனை செய்ததில் மொத்தம் 24 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக ஒரு பெண்ணை கைது செய்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்று முன்தினம் அதிகாலை தன்பாத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த ரயிலில் காவல்துறையினர் சோதனை செய்தபோது சந்தேகப்படும்படி இருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த நபர் வைத்திருந்த பையில் 7 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த 29 வயதுடைய தம்பிதார் ராணா என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து ரயில்வே காவல்துறையினர் அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதேபோல அரக்கோணம் ரயில் நிலையத்திலும் 14 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை ரயில்வே காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறிகையில், தமிழகத்திற்கு ஆந்திராவில் இருந்து ரயிலில் அதிகமாக கஞ்சா கடத்தப்படுகிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்காணிக்க படுவதை அறிந்துகொண்டு கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மெதுவாக வரும்போது கஞ்சா பொட்டலத்துடன் குற்றவாளிகள் நடுவழியில் கீழே குதித்து அங்கிருந்து பேருந்தில் தப்பித்து சென்றுவிடுகின்றனர்.

இதுகுறித்து ஆந்திர மாநில ரயில்வே போலீசாரிடம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் கஞ்சா கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு நடுவழியில் குதித்து தப்பி ஓடும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |