நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர் நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு போன்றோருக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அப்புகாரை விசாரித்த காவல்துறையினர், இது தவறான புகார் என்று வழக்கை முடித்து வைத்து நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதை எதிர்த்து வசந்தி தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் புகார் மனு மீது மறுவிசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்தது.
அந்த வகையில் வழக்கை விசாரணை செய்த நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் பாக்கியலட்சுமி, தவறான புகார் என்று வழக்கை மீண்டும் முடித்து வைத்து, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவின்படி மறு விசாரணை மேற்கொள்ளாமல் வழக்கை முடித்து வைத்ததாக சொல்லி, ஆய்வாளர் பாக்கியலட்சுமிக்கு எதிராக வசந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் ஆய்வாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நில விற்பனை சிவில் வழக்கு என்பதால் வழக்கை முடித்து வைத்ததாகவும், மறுவிசாரணை நடத்தப்பட்டதாகவும் வாதிட்டார். அதுமட்டுமல்லாமல் தவறு செய்திருப்பதாக நீதிமன்றம் கருதினால் மன்னிப்பு கோருவதாக ஆய்வாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி வேல்முருகன், நீதிமன்ற உத்தரவை வேண்டும் என்றே அவமதிக்கவில்லை என்று சொல்லி , அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தாராம்.
அதன்பின் நீதிபதி கூறியபோது, “நிலத்தை விற்பனை செய்தவர் உயிருடன் இருந்தபோதே விசாரித்து இருந்தால் முழு உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கும். தற்போது காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமை அற்றவர்களாகவும் இருக்கின்றனர். 10 சதவீத அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருக்கின்றனர். ஊழல்வாதி அதிகாரிகளை களைந்துவிட்டு, திறமையற்ற அதிகாரிகளுக்கு போதிய பயிற்சி வழங்கவேண்டிய நேரம் இதுவாகும்” என்று தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.