காவல்நிலையத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது.
சென்னை மாவட்டம் செங்குன்றம் அருகே அலமாதி வேட்டைக்காரன் பாளையத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை கொடுங்கையூர் காவல்துறையினர் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் ராஜசேகர் காவல்நிலையத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக ராஜசேகர் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கொடுங்கையூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ராஜசேகர் குடும்பத்தினர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படியும், ராஜசேகர் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்கும்படியும் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ராஜசேகர் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படியும், ராஜசேகர் பிரேத பரிசோதனை அறிக்கையை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.