பழ வியாபாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பழமலை நாதர்நகர் பகுதியில் ஜமால் மைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசாருதீன்(24) என்ற மகன் உள்ளார். இவர் மினி லாரியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அசாருதீன் அதே பகுதியில் வசிக்கும் ஜெகன் பாபு என்பவரிடம் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளார். அதற்கு 4 மாதமாக வட்டியை மட்டும் கொடுத்துள்ளார். இந்நிலையில் அசல் பணத்தை கொடுக்க தாமதமானதால் ஜெகன் பாபு அசாருதீனின் மினி லாரியை எடுத்து சென்றுள்ளார்.
இது தொடர்பாக அசாருதீனும், ஜெகன் பாபுவும் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நேற்று காலை விருதாச்சலம் காவல் நிலையத்திற்கு சென்ற அசாருதீன் ஜெகன் பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியுள்ளார். அப்போது போலீசார் உரிய பதில் அளிக்காததால் கோபமடைந்த அசாருதீன் காவல் நிலையத்திற்கு எதிரே நின்று கொண்டு உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் பெட்ரோல் பாட்டிலை பறித்து அசாருதீன் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.