காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பருவ மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கிறது. தொடர்ந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 120 அடியை எட்டியது. அணையில் இருந்து பாசன தேவைக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி கரையோர பகுதி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஈரோட்டில் காவிரி கரையில் வருவாய்த் துறையினர் தண்டோரா மூலம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். காவிரி ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும், பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.