காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் செய்யும்படி பொதுமக்கள் காலிகுடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் கோரையாற்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் எங்களுக்கு காவிரி குடிநீர் மட்டும் விநியோகம் செய்யும்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பேரூர் செயலாளர் ரவிநாத் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் திரண்டு நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி அலுவலர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் அவர்களின் கோரிக்கையை பரிசீலித்து விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறிய பின்னரே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.