காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 3 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இருக்கின்ற கிரீரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக நேற்று பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பின்னர் மத்திய ரிசர்வ் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அச்சமயத்தில் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கர துப்பாக்கிச் சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 2 பேர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல் சிறப்பு அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தாக்குதலில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து பயங்கரவாதிகளிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜயகுமார் கூறியுள்ளார். இந்த தாக்குதல் கடந்த 3 தினங்களில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்தியுள்ள இரண்டாவது தாக்குதல் ஆகும். இதேபோன்று கடந்த 14ஆம் தேதி நங்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.