இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்து உள்ளார்.
விஜயதசமி தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் அதன் தலைவரான மோகன் பகவத் சிறப்புரை ஆற்றினார். அதில் பேசிய அவர் அனைவரும் ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும் வாழவே பண்டிகைகள் மற்றும் விழாக்களை கொண்டாடி வருகிறோம். எனவே சாதி மத அடிப்படையிலான பிரிவினைகளை அனைவரும் மறந்து அமைதியை நிலைநிறுத்தி தேசத்தை வலுப்படுத்த வேண்டும் என அவர் கூறினார். மேலும் மக்கள் தொகை பெருக்கம் குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறிய அவர் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டுவர ஒரு கொள்கையை வடிவமைக்க வேண்டும் எனவும் கூறினார்.
மக்கள் தொகை ஏறத்தாழ ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மேலும் தேச நலனில் அக்கறை கொண்டுள்ள குடிமக்கள் குறிப்பாக இந்துக்கள் மீது கொலைவெறி தாக்குதல்களை ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாதிகள் நிறுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறினார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பயங்கரவாதம் செய்யும் தீவிரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் இந்தக் கொரோனாவிற்கு பின்னர் சிறுவர்கள் கையில் அதிக அளவில் செல்போன் புழங்கி வருவதாக கூறிய அவர். இந்தியாவில் போதைப் பொருள் பயன்படுத்தும் அளவு அதிகரித்து உள்ளது என கூறினார். இவற்றையெல்லாம் முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.