கஞ்சா பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ராணி என்பவர் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்தபோது சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து 25 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த வசந்தி இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.