சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் புகையிலை பொருட்களை கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள், பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சட்டவிரோத செயல்களை தடுக்கும் பொருட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள வரிச்சியூர் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நடத்திய சோதனையில் ஒரு வீட்டில் 53 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது இதனை அடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த பாண்டியன்(40), ராஜா(42), ரஞ்சித்(23), சிவா(34) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், 3 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.