அனுமதியின்றி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 4 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அரசின் விதிமுறைகளை மீறி பட்டாசு தயாரிக்கும் ஆலைகளின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி தாசில்தார் ரங்கசாமி, சிவகாசி தொழிலக பாதுகாப்பு துணை இயக்குனர் குமரேசன், தீயணைப்பு தடுப்புக் குழு நிலை அலுவலர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து ஆலைகளிலும் ஆய்வு செய்தனர். இந்நிலையில் செவல்பட்டி கிராமத்தில் சங்கரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு அலையை சோதனை செய்தனர். அந்த சோதனையில் நீதிமன்றம் தடையை மீறி சரவெடி பட்டாசுகளை உற்பத்தி செய்தது தெரியவந்துள்ளது.
மேலும் கந்தகம் இருப்பு பதிவேடு தணிக்கைக்கு சமர்ப்பிக்காததும் , கந்தகம் இருப்பு அறையில் 500 கிலோ கந்தகம் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது, இதனையடுத்து காவல்துறையினர் அலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்கள் மற்றும் 4 லட்சம் பட்டாசுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.