தீவிர ரோந்து பணியின் போது காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கடத்தூர் காவல்துறையினர் செட்டிபாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த ரோந்து பணியின் போது பழனி கவுண்டம்பாளையம் அருகே ஒரு சரக்கு வேன் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தது. அந்த வேனை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையின் போது ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 3 1/2 டன் அரிசி இருந்துள்ளது. இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் வேனையும் பறிமுதல் செய்து உணவு கடத்தல் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு சரக்கு வேன் ஓட்டுநர் பிரசாந்த் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் போது பழனி கவுண்டம்பாளையம் பகுதியில் இருந்து குருமந்தூர் பகுதிக்கு அரிசி கடத்தப்பட்டது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.