சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி அமைந்துள்ளது. இங்கு சட்ட விரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாகனங்களை காவல்துறையினர் சோதனை செய்தனர்.
அந்த சோதனையின் போது ஒரு சரக்கு லாரியில் 1500 கிலோ அரிசியும், ஒரு காரில் 500 கிலோ அரிசியும் இருப்பது தெரியவந்தது. இதேப்போன்று ஒரு குடோனில் 3000 கிலோ அரிசி பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்வதோடு 2 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கார் ஓட்டுனர் குமார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.