காட்பாடி அருகில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி பிரம்மபுரத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பிரம்மபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் நான்கு பேர் சீட்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள். உடனே அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர். அப்போது காவல்துறையினர் மூன்று பேரை மடக்கி பிடித்தனர். மேலும் ஒருவர் தப்பிச் சென்றார்.
இது குறித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய கார்த்திக், 42 வயதுடைய சீனிவாசன், 48 வயதுடைய சந்திரசேகர் மற்றும் தப்பித்து ஓடியவர் 30 வயதுடைய வினோத் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்து அவர்களிடம் 200 ரூபாயும், 40 கார்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய வினோத்தை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.