சட்ட விரோதமாக மணலை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் 80 மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறு காவிரி ஆற்று பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிபப்டையில் பரமத்திவேலூர் காவல்துறையினர் ஓலப்பாளையம் அருகே அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சந்தேகப்படும்படி வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அப்போது அந்த ஆட்டோவில் சட்ட விரோதமாக அனுமதியின்றி மணலை கடத்தி வந்தது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து ஆட்டோவில் இருந்த நன்செய் இடையாறை சேர்ந்த கேசவன்(23), ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன்(27) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சரக்கு ஆட்டோ மற்றும் 80 மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.