சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு பகுதியில் சிலர் சூதாட்டம் விளையாடுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி சப்- இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான குழு கன்னேரிமுக்கு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வீட்டில் சிலர் சூதாட்டம் விளையாடுவது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் வீட்டிலிருந்த 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஊட்டியை சேர்ந்த குருமூர்த்தி, கோத்தகிரியை சேர்ந்த சிவா, கன்னேரிமுக்கு பகுதியைச் சேர்ந்த தியாகு, நடராஜன், செந்தில் குமார் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்த 13,170 ரூபாய் பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.