சட்டவிரோதமாக மணல் அள்ளிய குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள முத்துவாஞ்சேரி மருதை ஆற்றுப்படுகை பகுதியில் சிலர் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக விக்கிரமங்கலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருதையாற்றில் மணல் அள்ளி கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்து விட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மணல் அள்ளியவர்கள் காசாங்கோட்டை பகுதியில் வசிக்கும் சக்திவேல், அஜித்குமார், மற்றும் பரத் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 சரக்கு ஆட்டோக்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.