ரயில் மூலமாக கடத்தி வரப்பட்ட கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கடந்த 15 நாட்களாக தனிப்படையினர் அமைக்கப்பட்டு அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில்கள் மூலமாக கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் தினந்தோறும் ரயில்களில் சோதனை செய்து வருகின்றனர்.
இதனையடுத்து மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ரயில்வே காவல்துறையினர் மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது 9 பார்சல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பார்சல்களை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் பிரித்து பார்த்த போது கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 19 கிலோ இருந்தது. இதன் மொத்த மதிப்பு 5,70,000 ரூபாய் ஆகும். இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் கடத்தல் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.