கேரளாவிற்கு கடத்த முயன்ற 950 கிலோ ரேஷன் அரிசிகளை பறக்கும் படை அதிகாரி பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
தேனி மாவட்டம் ரயில்வே நிலையம் சாலையில் ஒருவரது வீட்டில் கேரளாவிற்கு கடத்தி செல்வதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படை துணை தாசில்தார் கண்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் துணை தாசில்தார் கண்ணன் தலைமையில் உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உமாதேவி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் ரயில்வே நிலையம் சாலையை சேர்ந்த ராஜவேல் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்துவது தெரியவந்துள்ளது. உடனடியாக அவரது வீட்டிற்கு சென்ற போது வீட்டிற்கு அருகே ஒரு மினி லாரியில் மளிகை பொருட்களுடன் 38 மூட்டைகளில் சுமார் 950 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்துள்ளது.
மேலும் ரேஷன் அரிசி என தெரியாத வகையில் மூடைகளில் தனியார் நிறுவனத்தின் பெயர் அச்சிடபட்டிருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நிஷா மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்த நிலையில் தலைமறைவான ராஜவேலை தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து 950 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மினிலாரி ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.