அரியலூரில் காணாமல் போன அனுமன் சிலையை காவல்துறையினர் கிணற்றில் இருந்து எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் அருகே குணமங்கலம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு அக்கோவில் வளாகத்தில் இருந்த ஒரு அடி உயரமுள்ள கல்லாலான அனுமன் சிலையை காணவில்லை என்று கோவில் நிர்வாக செயல் அலுவலர் விக்கிரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் சரத்குமார் மற்றும் சில காவலர்கள் அனுமன் சிலையை தேடும் பணியை மேற்கொண்டுள்னர்.
இதையடுத்து சம்பவத்தன்று கோவில் வளாகத்தில் உள்ள கிணற்றில் நீரை அப்புறப்படுத்திவிட்டு உள்ளே இறங்கி தேடிப் பார்த்தபோது அனுமன் சிலை சேற்றில் சிக்கிக் கிடந்துள்ளது. அந்த சிலையை மீட்டு சுத்தப்படுத்தி அபிஷேகம் செய்து அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி அனுமன் சிலையை கிணற்றில் போட்டது யார்? என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.