திண்டுக்கல் மாவட்டம் அருகே ரெட்டிய பட்டியில் கன்னிமார் கோயில் இருக்கிறது. இந்த கோயிலின் அருகில் தனியார் தோட்டத்தில் சுமார் 40அடி ஆழம் உள்ள கிணறு இருக்கிறது. இப்போது கிணற்றில் 6 அடி தண்ணீர் உள்ளது. நேற்று அந்த கிணற்றின் பக்கவாட்டு பகுதியில் 2 பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடி கொண்டிருந்தது. அவற்றில் ஒன்று கரு நாகம், மற்றொன்று சாரைப் பாம்பு ஆகும். அவ்வாறு பாம்புகள் பின்னிப்பிணைந்த காட்சியை சில பேர் வேடிக்கை பார்த்தனர்.
இத்தகவல் அப்பகுதியில் காட்டுத் தீ போல பரவியது. இதனையடுத்து ரெட்டியபட்டியை சேர்ந்த பெரும்பாலானோர் அங்குவந்து பாம்புகள் பின்னிப் பிணைந்த காட்சியை ஆர்வமுடன் பார்த்தனர். அத்துடன் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தனர். சுமார் 5 மணிநேரமாக 2 பாம்புகளும் பின்னிப் பிணைந்து நடனமாடியது. அதன்பின் அவை கிணற்றிலுள்ள பாறை இடுக்குக்குள் சென்றுவிட்டது. சென்ற சில வாரங்களுக்கு முன் அங்குள்ள மாரியம்மன் கோயில் கிணற்றில் இதேபோன்று 2 பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடியது குறிப்பிடத்தக்கது.