வாலிபர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பிள்ளை தெருவில் இருக்கும் தனியார் பள்ளியில் பின்புறம் விவசாய கிணறு அமைந்துள்ளது. அந்த கிணற்றில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட நபர் அன்னை இந்திரா நகரை சேர்ந்த ஹரிஹரன்(31) என்பது தெரியவந்தது. போதைக்கு அடிமையான ஹரிஹரன் கடந்த 12-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு அவர் கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். எனவே ஹரிஹரன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.