செங்கல்பட்டு மாவட்டத்தில் கிணற்றிற்கு குளிக்க சென்ற வாலிபர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ராமபாளையம் பகுதியில் சிவராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜித்தன் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் ஜித்தன் அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் இருவரும் சேர்ந்து நென்மேலி பகுதியிலுள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது கிணற்றிற்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அணிந்திருந்த உடைகளை கழற்றி வைத்து விட்டு கிணற்றினுள் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.
இதனையடுத்து அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் கிணற்றில் குளிக்கச் சென்ற இருவரும் நீண்ட நேரம் வெளியே வராததால் சந்தேகமடைந்து கிணற்றுக்குள் எட்டிப் பார்த்துள்ளார். ஆனால் கிணற்றினுள் இருவரையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் மூழ்கி இறந்த நிலையில் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.