முதியவர் கிணற்றில் விழுந்து விட்டதாக நினைத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நெய்குப்பம் கிராமத்தில் விவசாயியான பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் 100 அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில் விவசாய கிணற்றில் குளிப்பதாக கூறிவிட்டு சென்ற பழனி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் பழனி கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என நினைத்த குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மோட்டார்கள் மூலம் கிணற்றில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். ஆனாலும் பழனியை கண்டுபிடிக்க இயலவில்லை. இதற்கிடையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வராததால் கோபமடைந்த பழனியின் உறவினர்கள் திருவண்ணாமலை- விழுப்புரம் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பிறகு கூடுதலாக மோட்டார்களை இணைத்து கிணற்றில் இருந்து நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து பழனியின் மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதியவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.