கிணற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள மடத்துப்பட்டி ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் அப்பகுதியில் இருக்கும் அருணாச்சலம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தேங்காய்களை பறித்துள்ளார். அப்போது சில தேங்காய்கள் கிணற்றுக்குள் விழுந்து விட்டது. இதனை எடுப்பதற்காக செல்வராஜ் கிணற்றுக்குள் இறங்கியபோது எதிர்பாராதவிதமாக மயங்கி தண்ணீரில் மூழ்கிவிட்டார்.
இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு செல்வராஜின் சடலத்தை மீட்டனர். அதன்பின் காவல்துறையினர் செல்வராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.