மூதாட்டி ஒருவர் எதிர்பாராமல் கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலுள்ள சென்னிமலை பகுதியில் வசிப்பவர் கோபாலசாமி(80). இவரின் மனைவி சங்கரம்மாள்(70). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆன நிலையில், வயதான இத்தம்பதியினர் தள்ளுவண்டியில் பஜ்ஜி மற்றும் போண்டா கடை வைத்து வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று காலை 6 மணியளவில் சங்கரம்மாள் அங்குள்ள ஊர் பொதுக் கிணறு அருகே சென்றுள்ளார். அப்போது மூதாட்டி கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு நீச்சல் தெரியும் என்பதால் கிணற்றில் தொங்கவிடப்பட்டிருந்த கயிற்றை பிடித்துக்கொண்டு காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று அலறி உள்ளார். அவரின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து பெருந்துறை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி மூதாட்டியை உயிருடன் மீட்டுள்ளனர். பின்னர் சங்கரம்மாள் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.