கிணற்றுக்குள் ரிக் லாரி விழுந்து மூழ்கிய விபத்தில் ஓட்டுநரும், கிளீனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு நாராயணன் பாளையத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிக் லாரி மூலம் ஆழ்துளை கிணறு தோண்டும் வேலை பார்த்து வருகிறார். நேற்று ஈரோடு மாவட்டத்திலுள்ள பழனிக்கவுண்டன் பாளையத்தில் இருக்கும் மணிவேல் என்பவரது தோட்டத்தில் ஆழ்துளைக்கிணறு தோன்றுவதற்காக பிரகாஷின் ரிக் லாரி சென்றுள்ளது. இந்நிலையில் தோட்டத்தில் இருக்கும் மண் பாதையில் லாரி பின்னோக்கி நகர்ந்தது.
அப்போது ரத்தினசாமி என்பவருக்கு சொந்தமான 50 அடி கிணற்றின் பக்கவாட்டு சுவர் சரிந்து விழுந்ததால் லாரி கிணற்றுக்குள் இறங்கி மூழ்க தொடங்கியது. இதனை பார்த்ததும் ரிக் லாரியின் ஓட்டுனர் ராமசாமி என்பவரும், கிளீனர் வேலன் என்பவரும் வாகனத்தில் இருந்து வெளியே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனையடுத்து கிரேன் மூலம் லாரியை மீட்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக மோட்டார் மூலம் கிணற்றில் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.