கிணற்றை தூர்வாரிகொண்டிருக்கும் போது மண்ணுக்குள் புதைந்து கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள பத்ரகாளிபுரம் பகுதியில் பெரிய கருப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு போதுமணி என்ற மனைவியும் 4 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் பெரியகருப்பனும், அதே பகுதியை சேர்ந்த உதயசூரியன் என்பவரும் போடி முந்தல் சாலையில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் தூர் வாரிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென மண் சரிந்து இருவரும் மண்ணுக்குள் புதைந்துள்ளனர். இதனையடுத்து அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பெரியகருப்பன் உயிரிழந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட உதயசூரியனை அங்கிருந்தவர்கள் போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போடி காவல்துறையினர் பெரியகருப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பெரியகருப்பன் உறவினர்கள் போடி அரசு மருத்துவமனையில் திரண்டு உடலை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போடி துணை சூப்பிரண்டு அதிகாரி சுரேஷ் மற்றும் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னரே அங்கிருந்தவர்கள் பெரியகருப்பன் உடலை வாங்கிக் கொண்டு கலைந்து சென்றனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.