இளம்பெண்ணிடம் இருந்து நூதன முறையில் பண மோசடி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுந்தராபுரத்தில் அனிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அணிதாவின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு லிங்க் வந்துள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்து பார்த்த போது அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியின் புகைப்படத்துடன் ஒரு செய்தி குறிப்பு இருந்துள்ளது. அதில் தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் இருந்து கிப்ட் கார்டுகளை வாங்கி இந்த எண்ணிற்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை நம்பிய அந்த இளம்பெண் தனது வங்கி கணக்கை பயன்படுத்தி கிப்ட் கார்டு வாங்க 5 திணைகளாக 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தியுள்ளார். அதன்பிறகு தனது நிறுவன தலைமை செயல் அதிகாரிக்கு இதுகுறித்த விவரங்களை இளம்பெண் இ-மெயில் அனுப்பியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரி அனிதாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் கிப்ட் கார்டு எதுவும் வாங்க கூறவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.