பேக்கரி கடையில் இருந்த 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை பேக்கரியில் இருந்த சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனாலும் தீயை அணைக்க முடியாததால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பேக்கரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
ஆனால் இந்த தீ விபத்தில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் காயமடைந்த செந்தில் மற்றும் ஊழியரான வேலுச்சாமி ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.