திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் திண்டுக்கல் நகர் பகுதியில் மும்மத தலைவர்களையும், முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். மேலும் இவர் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் பேசியதாவது, அ.தி.மு.க. ஆட்சியில் கிராமப்புறங்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. கிராமங்களின் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், சுகாதாரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன.
கிராமங்களில் நகரங்களுக்கு இணையாக சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் உட்கட்டமைப்பு நிதி, தொகுதி மேம்பாட்டு நிதி, மத்திய மாநில அரசுகளின் நேரடி திட்டங்கள், பொது நிதி ஆகியவற்றால் கிராமங்கள் அபரீத வளர்ச்சி அடைந்துள்ளது. அ.தி.மு.க. அரசு கடந்த பத்து வருடங்களாக மக்களுக்கான நலத் திட்டங்களை சிறப்பாக செய்து வந்துள்ளது. எனவே நல்லாட்சி மீண்டும் அமைய இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து மக்கள் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று அவர் பேசினார்.