கிராமப்புறங்களில் நூலக சேவை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நூலகங்கள் இல்லாத கிராமங்களில் நூலக நண்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இந்த சேவை தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலமாக 15 லட்சம் வாசகர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 56.26 லட்சம் நிதி ஒதுக்கப்படும். இதனையடுத்து 76 நூலகங்களில் மெய்நிகர் நூலகத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 1 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள். இதற்காக 57.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். அதன்பிறகு 352 நூலகங்களில் மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக இலவச wi-fi கனெக்ஷன் ஏற்படுத்தப்படும். இதற்காக 23 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் சார்பாக சர்வதேச அளவில் பல்துறை நிபுணர்கள், அறிவியல் ஆய்வாளர்கள், புகழ்பெற்ற அறிஞர்களின் மிகச்சிறந்த உரைகள், தொழில்நுட்பம் ஆகியவை தமிழ்நாடு உரை என்ற தலைப்பில் இணையதளம் மூலமாக உலகெங்கும் இருக்கும் தமிழர்களை சென்றடையும் வகையில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக 37.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அறிஞர் பெரியசாமி தூரன் தொகுத்த கலைக்களஞ்சியங்கள் 10 தொகுதிகளும், சிறார் களஞ்சியங்கள் 10 தொகுதிகளும் ஒரே ஆவணப் பதிவாக ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும். மேலும் 15 வயதிற்கு மேல் இருக்கும் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்காக 9.83 கோடி செலவில் புதிய எழுத்தறிவுத் திட்டம் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.