தமிழகத்தில் கிராம உதவியாளர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கின்றது.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது, சென்ற 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் இருந்து 2022 ஆம் வருடம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தமிழக முழுவதும் 2748 கிராம உதவியாளர் காலியிடங்கள் இருக்கின்றது. இதில் காலி பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்தவித விதிமீறலும் இல்லாமல் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதற்காக பெறப்படும் விண்ணப்பங்கள் நவம்பர் 14ஆம் தேதி பரிசீலனை செய்து முறையான நேர்காணல் நடத்தி டிசம்பர் 19ஆம் தேதிக்குள் பணிநியமான ஆணையை வழங்க வேண்டும்.
தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை டிசம்பர் 19ஆம் தேதி வெளியிட்டு அன்றைய தினமே பணி ஆணைகளை வழங்க வேண்டும். பணிக்காக நடத்தப்படும் எழுத்து திறன் தேர்வை கண்காணிக்க தாலுகா அளவில் துணை ஆட்சியர் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார். தாசில்தார்கள் மூலம் தாலுகா அளவில் மேற்கொள்ளப்படும் ஆட்கள் தேர்வு முறையாக விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுகின்றதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். எந்தெந்த தேதியில் கிராம உதவியாளர் தேர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதற்கான விதிகள், வழிகாட்டுதல்களை தாசில்தார்களுக்கு ஆட்சியர்கள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என குறிப்பிட்டு இருக்கின்றது.