கிராம சபை கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ததற்கான உண்மை காரணத்தை கூறுங்கள் என்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குரல் எழுப்பியுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய மூன்று தினங்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்தக் கூட்டத்தில் ஒரு கிராமத்திற்கே எது தேவை மற்றும் எது தேவையற்றவை என்பதை அவர்களே முடிவு செய்து தீர்மானம் செய்யப்படும். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் மிக வலிமையானவை. அதுமட்டுமன்றி ஒரு ஆண்டில் ஒவ்வொரு கிராமத்திலும் திட்டங்களுக்காக எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்று மக்களுக்கு பொது வெளியில் சொல்லப்படும். அதே சமயத்தில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் பற்றி அங்கு பேசப்பட்டு அதற்கு பதில் அளிக்கப்படும்.அதனால் கிராம சபை கூட்டம் குறித்த விழிப்புணர்வு கடந்த சில வருடங்களாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் வேகம் அதிகமாக இருப்பதால் கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்து தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.இது குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் வெளியிட்ட பதிவில், “கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்வதற்கான நிஜ காரணம் என்ன? கொரோனா கால செலவு கணக்கு குறித்து மக்கள் கேள்விகள் கேட்பார்கள் என்ற பயமா? அல்லது மக்கள் நீதி மையம் கொண்டு வந்துவிடும் என்ற நடுக்கமா? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? நாளை நமதே”என்று அவர் தெரிவித்துள்ளார்.