திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி நாளை (சனிக்கிழமை) அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.17 மணிக்கு நிறைவடைகிறது. விடுமுறை தினத்தில் சித்ரா பவுர்ணமி வருவதால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியன்று 3 ஆயிரத்து 242 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. திருவண்ணாமலை நகரை சுற்றி 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 37 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் 15 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.அருணாசலேவரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் வயது முதிர்ந்த பக்தர்களை அழைத்து செல்ல 3 பேட்டரி கார்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கிரிவலம் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 39 இருசக்கர வாகன பேட்ரோல் போலீசார் கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். மருத்துவ உதவிக்காக இரு சக்கர வாகன ஆம்புலன்சு வாகனமும் ரோந்து பணியில் இருக்கும். திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கற்பூரம் ஏற்றுவதற்கும், மலை மீது ஏறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.