கிருஷ்ணகிரி, கன்னியாகுமரியில் உள்ளவை உள்ளூர் வெட்டுக்கிளிகள் என வேளாண் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வட மாநிலங்களில் கோடிக்கணக்கான வெட்டுகிளிகளின் திடீர் படையெடுப்பால் வட மாநில விவசாயிகள் பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரியில் வாழை மரங்கள் மற்றும் எருக்கன் செடிகளில் நேற்று மாலை ஏராளமான வெட்டுக்கிளிகள் மொய்த்தபடி இருந்ததால் தமிழகத்திலும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தொடங்கியதாக அச்சம் எழுந்தது. இதனையடுத்து கிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அதிகளவில் காணப்படுவது குறித்து வேளாண் செயலாளர் ககன்தீப் சிங் பேடி இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் பேட்டியளித்த அவர், வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகமாக உள்ளது, வடமாநிலங்களில் பயிர்களை சேதப்படுத்துவது பாலைவன வெட்டுக்கிளி என கூறியுள்ளார். பீகார், ஒடிசா வரை வெட்டுக்கிளி தாக்குதல் இருக்கலாம் என தேசிய அமைப்பு எச்சரித்துள்ளது என தெரிவித்த அவர், இந்தியாவின் தெற்குப் பகுதியில் வெட்டுக்கிளி ஆபத்து குறைவாகவே உள்ளது.
எனவே வெட்டுக்கிளிகள் கூட்டமாக தென்மாநிலங்களுக்கு வரும் வாய்ப்பு மிகக்குறைவு என்பதால் வெட்டுக்கிளிகளை கண்டு தமிழக விவசாயிகள் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி, கன்னியாகுமரியில் உள்ளவை உள்ளூர் வெட்டுக்கிளிகள் என ககன்தீப் சிங் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் 200 வகையான வெட்டுக் கிளிகள் உள்ளன, தமிழகத்தில் நன்மை செய்யும் வெட்டுக்கிளி வகைகளும் இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வெட்டுக்கிளி வந்தால் அதனை அழிப்பதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும். வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளன என்றும் பாலைவன வெட்டுக்கிளிகளை அழிக்க 3 வகையான வழிமுறைகள் திட்டமிடப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக வேளாண், தீயணைப்பு அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்றும் வேளாண் செயலாளர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.