ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் கிருஷ்ணகிரி. மேலும் பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் பன்முகத்தன்மை கொண்ட மாவட்டமாக உள்ளது. விவசாயம் மற்றும் பால் உற்பத்தியை பிரதானமாக நம்பியுள்ள தொகுதி இதுவாகும். நெல், ராகி, சோளம், துவரை பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. மா மற்றும் மல்லி பூ சாகுபடி இங்கு அதிகம்.
கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக 6 முறை, அதிமுக 6 முறையும் வென்றுள்ளன. காங்கிரஸ் இருமுறையும், சுயேச்சை வேட்பாளர் ஒரு முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர். தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் திமுகவின் டி. செங்குட்டுவன். சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகைப்பூ சாகுபடி செய்யப்படும் இந்த பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை.
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை, அதிமுக அரசு கிடப்பில் போட்டு விட்டதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கிருஷ்ணகிரி தொகுதிக்கு ரயில் சேவை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. என்னைகொல் என்னும் இடத்தில் அரசு தடுப்பணை கட்டுவதால் தென்பெண்ணை ஆறு வறண்டு போக கூடும் என அச்சம் தெரிவிக்கும் விவசாயிகள், வானுப்பட்டு என்னுமிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பது, பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை அதிமுக அரசு உதாசீனப்படுத்திவிட்டதகவும் எம்எல்ஏ செங்குட்டுவன் குற்றம் சாட்டியுள்ளார். திமுக ஆட்சி அமைந்ததும் வாசனை திரவிய தொழிற்சாலை உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். கிருஷ்ணகிரி தொகுதியில் மூடப்பட்ட 20க்கும் மேற்பட்ட மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளை திறக்க வேண்டும் என்றும், தேங்காய் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.