தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் மூலம் வழங்கக்கூடிய நீர் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.
சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆந்திர அரசு தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு 12 டிஎம்சி தண்ணீரை கிருஷ்ணா நதி மூலம் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது. சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திராவிலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீர் முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீர், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீர் மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கப் படுவது தமிழ்நாடு-ஆந்திரா அரசுக்கு இடையே போடப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும்.
ஆனால் பொதுப்பணித்துறை வரலாற்றில் இதுவரை முழுமையாக 12 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்ததே கிடையாது. காரணம் சேதமடைந்த கால்வாய்கள் மேலும் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை போன்றவை காரணமாக தண்ணீர் கிருஷ்ணா நதியில் இருந்து நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. கால்வாய்கள் சேதமடைந்த காரணத்தினாலும் பருவமழை நன்றாக பெய்யாத காரணத்தினால் தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் பருவமழை நன்றாக பெய்து ஆந்திரா அணையில் தற்போது போதிய இருப்பு நீர் உள்ள காரணத்தினால் தமிழகத்திற்கு இந்த ஜூலை முதல் அக்டோபர் மாதம் வழங்க வேண்டிய ஐந்து டிஎம்சி மேல் கூடுதலாக தண்ணீர் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் தண்ணீர் பஞ்சம் என்பது இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.