வங்காளதேசத்தில் இந்து மத கடவுள் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஷேக்ஹசினா பங்கேற்றார்.
இந்து மத கடவுளான கிருஷ்ணரின் பிறந்த நாளாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இந்து மதத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், இஸ்லாமிய மதத்தினரை பெரும்பான்மையாக கொண்ட வங்காளதேசத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வங்காளதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் நேற்று நிகழ்ச்சி நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா கூறியதாவது, “எனக்கு உள்ள அதே உரிமை உங்களுக்கும் உள்ளது. அனைத்து மதத்தினரும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
நீங்கள் இந்த நாட்டின் மக்கள், உங்களுக்கு இங்கு சம உரிமை உள்ளது. எனக்கு உள்ள அதே உரிமை உங்களுக்கும் உள்ளது. நீங்கள் இந்த நாட்டு குடிமக்கள் என நினைக்க வேண்டும் மற்றும் நீங்கள் சம உரிமையை அனுபவிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் 161.5 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட வங்காளதேசத்தில் 2022 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7.95 சதவிகிதம் பேரை இந்து மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.