திண்டுக்கல் கொடைக்கானலில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி சிலுவைப்பாதை ஊர்வலம் நடைபெற்றது.
கொடைக்கானல் வட்டாரத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி சிலுவைப் பாதை மற்றும் திருயாத்திரை ஊர்வலம் வட்டார அனைத்து ஆலயங்களின் சார்பாக கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது. கொடைக்கானல் மூஞ்சிக்கல் பங்கு தந்தையும், கொடைக்கானல் வட்டார அதிபருமான எட்வின் சகாய ராஜா மூஞ்சிக்கல் திருஇருதய ஆலயத்தில் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் இயேசுவின் பாடுகளை தியானித்த வண்ணம், சிலுவையை சுமந்து கொண்டு சென்றனர். இந்த ஊர்வலம் கோக்கர்ஸ்வால்க், அண்ணாசாலை, செயின்ட் மேரிஸ் ரோடு வழியாகச் சென்று தூய சலேத் மாதா ஆலயத்தில் வந்து நிறைவடைந்தது. இந்த ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் கொடைக்கானல் வட்டார பகுதியை சேர்ந்த பங்கு தந்தையர்கள், சேவியர், ஏஞ்சல், அருள் ராயன் ஆகிய பலரும் கலந்து கொண்டனர். அதன்பின் அந்த ஆலயத்தில் அன்னதானமும் நடைபெற்றது.