தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் ஹாஸ்பல் நகரில் நேசமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி உஷா தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேசமணி தனது குடும்பத்தினருடன் அதிகாலை 5 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு பிரார்த்தனைக்காக சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு நேசமணியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோல்களை உடைத்து மர்ம நபர்கள் 1 1/2 லட்ச ரூபாய் பணம், 20 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நேசமணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் 7 1/2 லட்சம் ரூபாய் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.