ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற நிகழ்ச்சிகளில் வில் ஸ்மித் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் 94 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவை நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார். இந்த விருது விழாவில் நடிகர் வில் ஸ்மித் தனது மனைவியுடன் சிறந்த நடிகருக்கான விருது வாங்க வந்திருந்தார். அப்போது கிறிஸ் ராக், வில் ஸ்மித் மனைவியின் ஹேர் ஸ்டைலை கிண்டல் செய்ததற்கு கோபமடைந்த வில் ஸ்மித் ஆஸ்கர் மேடைக்கு வந்து கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்து விட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பிறகு ஆஸ்கர் விருது விழாவில் தான் இப்படி நடந்து கொண்டதற்கு வில் ஸ்மித் மன்னிப்பு கோரினார்.
வில் ஸ்மித் மீது ஆஸ்கர் நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஆஸ்கர் விருது மற்றும் பிற விருது வழங்கும் விழாக்களில் வில் ஸ்மித் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்கர் நிர்வாகம் அறிக்கையில் கூறியுள்ளதாவது, வில் ஸ்மித் ஆஸ்கர் மேடையில் நடந்து கொண்ட விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த எதிர்பாராத சம்பவத்திற்காக நாங்கள் வருந்துகிறோம். இந்த அசாதாரண சூழலிலும் அமைதியாக பொறுமை காத்து கிறிஸ் ராக்கிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். ஸ்மித்துக்கு தடை என்னும் முடிவு கலைஞர்கள் மற்றும் விருந்தினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கோடும் அகாடமியின் மீதான நம்பிக்கையை மீண்டும் கொண்டுவரும் நோக்கோடும் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.